திருப்புகழ் பாடல் 151 – பழநி
தந்தத் தனதன தனனா தனனா
தந்தத் தனதன தனனா தனனா
தந்தத் தனதன தனனா தனனா …… தனதான
கொந்துத் தருகுழ லிருளோ புயலோ
விந்தைத் தருநுதல் சிலையோ பிறையோ
கொஞ்சிப் பயில்மொழி அமுதோ கனியோ …… விழிவேலோ
கொங்கைக் குடமிரு கரியோ கிரியோ
வஞ்சிக் கொடியிடை துடியோ பிடியோ
கொங்குற் றுயரல்கு லரவோ ரதமோ …… எனுமாதர்
திந்தித் திமிதிமி திமிதா திமிதோ
தந்தித் திரிகட கிடதா எனவே
சிந்திப் படிபயில் நடமா டியபா …… விகள்பாலே
சிந்தைத் தயவுகள் புரிவே னுனையே
வந்தித் தருள்தரு மிருசே வடியே
சிந்தித் திடமிகு மறையா கியசீ …… ரருள்வாயே
வெந்திப் புடன்வரு மவுணே சனையே
துண்டித் திடுமொரு கதிர்வே லுடையாய்
வென்றிக் கொருமலை யெனவாழ் மலையே …… தவவாழ்வே
விஞ்சைக் குடையவர் தொழவே வருவாய்
கஞ்சத் தயனுட னமரே சனுமே
விந்தைப் பணிவிடை புரிபோ தவர்மே …… லருள்கூர்வாய்
தொந்திக் கணபதி மகிழ்சோ தரனே
செங்கட் கருமுகில் மருகா குகனே
சொந்தக் குறமகள் கணவா திறல்சேர் …… கதிர்காமா
சொம்பிற் பலவள முதிர்சோ லைகள்சூழ்
இஞ்சித் திருமகள் புடைசூ ழருள்சேர்
துங்கப் பழநியில் முருகா இமையோர் …… பெருமாளே.