திருப்புகழ் பாடல் 286 – திருத்தணிகை
தனனத் தந்ததனத் தனனத் தந்ததனத்
தனனத் தந்ததனத் …… தனதான
பொருவிக் கந்தொடடர்ச் செருவிக் கன்றொடுமிப்
புதுமைப் புண்டரிகக் …… கணையாலே
புளகக் கொங்கையிடத் திளகக் கொங்கையனற்
பொழியத் தென்றல்துரக் …… குதலாலே
தெருவிற் பெண்கள்மிகக் கறுவிச் சண்டையிடத்
திரியத் திங்களுதிப் …… பதனானே
செயலற் றிங்கணையிற் றுயிலற் றஞ்சியயர்த்
தெரிவைக் குன்குரவைத் …… தரவேணும்
அருவிக் குன்றடையப் பரவிச் செந்தினைவித்
தருமைக் குன்றவருக் …… கெளியோனே
அசுரர்க் கங்கயல்பட் டமரர்க் கண்டமளித்
தயில்கைக் கொண்டதிறற் …… குமரேசா
தருவைக் கும்பதியிற் றிருவைச் சென்றணுகித்
தழுவிக் கொண்டபுயத் …… திருமார்பா
தரளச் சங்குவயற் றிரளிற் றங்குதிருத்
தணிகைச் செங்கழநிப் …… பெருமாளே.