திருப்புகழ் பாடல் 292 – திருத்தணிகை
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன …… தனதான
முகிலு மிரவியு முழுகதிர் தரளமு
முடுகு சிலைகொடு கணைவிடு மதனனு
முடிய வொருபொரு ளுதவிய புதல்வனு …… மெனநாடி
முதிய கனனென தெய்வதரு நிகரென
முதலை மடுவினி லதவிய புயலென
முகமு மறுமுக முடையவ னிவனென …… வறியோரைச்
சகல பதவியு முடையவ ரிவரென
தனிய தநுவல விஜயவ னிவனென
தபனன் வலம்வரு கிரிதனை நிகரென …… இசைபாடிச்
சயில பகலவ ரிடைதொறு நடைசெயு
மிரவு தவிரவெ யிருபத மடையவெ
சவித அடியவர் தவமதில் வரவருள் …… புரிவாயே
அகில புவனமு மடைவினி லுதவிய
இமய கிரிமயில் குலவரை தநுவென
அதிகை வருபுர நொடியினி லெரிசெய்த …… அபிராமி
அமரு மிடனன லெனுமொரு வடிவுடை
யவனி லுரையவன் முதுதமி ழுடையவ
னரியொ டயனுல கரியவ னடநவில் …… சிவன்வாழ்வே
திகிரி நிசிசரர் தடமுடி பொடிபட
திரைக ளெறிகடல் சுவறிட களமிசை
திரடு குறடுகள் புரள்வெகு குருதிகள் …… பெருகாறாச்
சிகர கிரிநெரி படபடை பொருதருள்
திமிர தினகர குருபர இளமயில்
சிவணி வருமொரு தணிகையில் நிலைதிகழ் …… பெருமாளே.