திருப்புகழ் பாடல் 23 – Thiruppugazh Song 23 – அமுதுததி விடமுமிழு: Amuthathu Vidamumizhu

திருப்புகழ் பாடல் 23 – திருச்செந்தூர்

ராகம் – கல்யாணி; தாளம் – அங்கதாளம் (9) (கண்ட ஜாதி த்ருபுடை)

தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமி-2

தனதனன தனதனன தந்தத் தந்தத்
தனதனன தனதனன தந்தத் தந்தத்
தனதனன தனதனன தந்தத் தந்தத் …… தனதான

அமுதுததி விடமுமிழு செங்கட் டிங்கட்
பகவினொளிர் வெளிறெயிறு துஞ்சற் குஞ்சித்
தலையுமுடை யவனரவ தண்டச் சண்டச் …… சமனோலை

அதுவருகு மளவிலுயி ரங்கிட் டிங்குப்
பறைதிமிலை திமிர்தமிகு தம்பட் டம்பற்
கரையவுற வினரலற உந்திச் சந்தித் …… தெருவூடே

எமதுபொரு ளெனுமருளை யின்றிக் குன்றிப்
பிளவளவு தினையளவு பங்கிட் டுண்கைக்
கிளையுமுது வசைதவிர இன்றைக் கன்றைக் …… கெனநாடா

திடுக்கடி தெனுமுணர்வு பொன்றிக் கொண்டிட்
டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுட் டுண்டுட்
டெனவகலு நெறிகருதி நெஞ்சத் தஞ்சிப் …… பகிராதோ

குமுதபதி வகிரமுது சிந்தச் சிந்தச்
சரணபரி புரசுருதி கொஞ்சக் கொஞ்சக்
குடிலசடை பவுரிகொடு தொங்கப் பங்கிற் …… கொடியாடக்

குலதடினி அசையஇசை பொங்கப் பொங்கக்
கழலதிர டெகுடெகுட டெங்கட் டெங்கத்
தொகுகுகுகு தொகுகுகுகு தொங்கத் தொங்கத் …… தொகுதீதோ

திமிதமென முழவொலிமு ழங்கச் செங்கைத்
தமருகம ததிர்சதியொ டன்பர்க் கின்பத்
திறமுதவு பரதகுரு வந்திக் குஞ்சற் …… குருநாதா

திரளுமணி தரளமுயர் தெங்கிற் றங்கிப்
புரளஎறி திரைமகர சங்கத் துங்கத்
திமிரசல நிதிதழுவு செந்திற் கந்தப் …… பெருமாளே.