திருப்புகழ் பாடல் 25 – Thiruppugazh Song 25 – அருணமணி மேவு: Arunamani Mevu

திருப்புகழ் பாடல் 25 – திருச்செந்தூர்
ராகம் – புன்னாக வராளி; தாளம் – அங்கதாளம் (24)

தகதகிட-2 1/2, தகிடதகதிமி-3 1/2,
தகதகிட-2 1/2, தகிடதகதிமி-3 1/2,
தகதகிட-2 1/2, தகிடதகதிமி-3 1/2,
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3

தனதனன தான தானன தனதனன தான தானன
தனதனன தான தானன தந்தத் தந்தத் …… தனதான

அருணமணி மேவு பூஷித ம்ருகமத படீர லேபன
அபிநவ விசால பூரண
அம்பொற் கும்பத் …… தனமோதி

அளிகுலவு மாதர் லீலையின் முழுகியபி ஷேக மீதென
அறவுமுற வாடி நீடிய
அங்கைக் கொங்கைக் …… கிதமாகி

இருணிறைய மோதி மாலிகை சருவி யுறவான வேளையி
லிழைகலைய மாத ரார்வழி
யின்புற் றன்புற் …… றழியாநீள்

இரவுபகல் மோக னாகியெ படியில்மடி யாமல் யானுமுன்
இணையடிகள் பாடி வாழஎ
னெஞ்சிற் செஞ்சொற் …… றருவாயே

தருணமணி யாட ராவணி குடிலசடி லாதி யோதிய
சதுர்மறையி னாதி யாகிய
சங்கத் துங்கக் …… குழையாளர்

தருமுருக மேக சாயலர் தமரமக ராழி சூழ்புவி
தனைமுழுதும் வாரி யேயமு
துண்டிட் டண்டர்க் …… கருள்கூரும்

செருமுதலி மேவு மாவலி யதிமதக போல மாமலை
தெளிவினுடன் மூல மேயென
முந்தச் சிந்தித் …… தருள்மாயன்

திருமருக சூரன் மார்பொடு சிலையுருவ வேலை யேவிய
ஜெயசரவ ணாம னோகர
செந்திற் கந்தப் …… பெருமாளே.