திருப்புகழ் பாடல் 45 – திருச்செந்தூர்
தந்ததன தான தந்ததன தான
தந்ததன தான …… தனதான
கன்றிலுறு மானை வென்றவிழி யாலே
கஞ்சமுகை மேவு …… முலையநலே
கங்குல்செறி கேச மங்குல்குலை யாமை
கந்தமலர் சூடு …… மதனாலே
நன்றுபொருள் தீர வென்றுவிலை பேசி
நம்பவிடு மாத …… ருடனாடி
நஞ்சுபுசி தேரை யங்கமது வாக
நைந்துவிடு வேனை …… யருள்பாராய்
குன்றிமணி போல்வ செங்கண்வரி போகி
கொண்டபடம் வீசு …… மணிகூர்வாய்
கொண்ட மயிலேறி அன்றசுரர் சேனை
கொன்றகும ரேச …… குருநாதா
மன்றல்கமழ் பூக தெங்குதிரள் சோலை
வண்டுபடு வாவி …… புடைசூழ
மந்திநட மாடு செந்தினகர் மேவு
மைந்தஅம ரேசர் …… பெருமாளே.