திருப்புகழ் பாடல் 105 – பழநி
தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் …… தனதான
அணிபட் டணுகித் திணிபட் டமனத்
தவர்விட் டவிழிக் …… கணையாலும்
அரிசுற் றுகழைத் தவர்பெற் றவளத்
தவன்விட் டமலர்க் …… கணையாலும்
பிணிபட் டுணர்வற் றவமுற் றியமற்
பெறுமக் குணமுற் …… றுயிர்மாளும்
பிறவிக் கடல்விட் டுயர்நற் கதியைப்
பெறுதற் கருளைத் …… தரவேணும்
கணிநற் சொருபத் தையெடுத் துமலைக்
கனியைக் கணியுற் …… றிடுவோனே
கமலத் தயனைப் ப்ரணவத் துரையைக்
கருதிச் சிறைவைத் …… திடுவோனே
பணியப் பணியப் பரமர்ப் பரவப்
பரிவுற் றொருசொற் …… பகர்வோனே
பவளத் தவளக் கனகப் புரிசைப்
பழநிக் குமரப் …… பெருமாளே.