திருப்புகழ் பாடல் 118 – பழநி
தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் …… தனதான
இருசெப் பெனவெற் பெனவட் டமுமொத்
திளகிப் புளகித் …… திடுமாதர்
இடையைச் சுமையைப் பெறுதற் குறவுற்
றிறுகக் குறுகிக் …… குழல்சோரத்
தருமெய்ச் சுவையுற் றிதழைப் பருகித்
தழுவிக் கடிசுற் …… றணைமீதே
சருவிச் சருவிக் குனகித் தனகித்
தவமற் றுழலக் …… கடவேனோ
அரிபுத் திரசித் தஜனுக் கருமைக்
குரியத் திருமைத் …… துனவேளே
அடல்குக் குடநற் கொடிபெற் றெதிருற்
றசுரக் கிளையைப் …… பொருவோனே
பரிவுற் றரனுக் கருணற் பொருளைப்
பயனுற் றறியப் …… பகர்வோனே
பவனப் புவனச் செறிவுற் றுயர்மெய்ப்
பழநிக் குமரப் …… பெருமாளே.