Thiruppugazh Song 144 – திருப்புகழ் பாடல் 144

திருப்புகழ் பாடல் 144 – பழநி

தான தந்ததனத் தான தந்ததனத்
தான தந்ததனத் …… தனதான

கார ணிந்தவரைப் பார டர்ந்துவினைக்
காதல் நெஞ்சயரத் …… தடுமாறிக்

கான ரம்புதிரத் தோல்வ ழும்புறுபொய்க்
காய மொன்றுபொறுத் …… தடியேனும்

தாரி ணங்குகுழற் கூர ணிந்தவிழிச்
சாப மொன்றுநுதற் …… கொடியார்தம்

தாள்ப ணிந்தவர்பொற் றோள்வி ரும்பிமிகத்
தாழ்வ டைந்துலையத் …… தகுமோதான்

சூர னங்கம்விழத் தேவர் நின்றுதொழத்
தோய முஞ்சுவறப் …… பொரும்வேலா

தூய்மை கொண்டகுறத் தோகை நின்றபுனச்
சூழ்பெ ருங்கிரியிற் …… றிரிவோனே

ஆர ணன்கருடக் கேத னன்தொழமுற்
றால முண்டவருக் …… குரியோனே

ஆலை யும்பழனச் சோலை யும்புடைசுற்
றாவி னன்குடியிற் …… பெருமாளே.