திருப்புகழ் பாடல் 152 – பழநி
தான தந்தன தத்தன தத்தம்
தான தந்தன தத்தன தத்தம்
தான தந்தன தத்தன தத்தம் …… தனதான
கோல குங்கும கற்புர மெட்டொன்
றான சந்தன வித்துரு மத்தின்
கோவை செண்பக தட்பம கிழ்ச்செங் …… கழுநீரின்
கோதை சங்கிலி யுற்றக ழுத்தும்
பூஷ ணம்பல வொப்பனை மெச்சுங்
கூறு கொண்டப ணைத்தனம் விற்கும் …… பொதுமாதர்
பாலு டன்கனி சர்க்கரை சுத்தந்
தேனெ னும்படி மெத்தரு சிக்கும்
பாத கம்பகர் சொற்களி லிட்டம் …… பயிலாமே
பாத பங்கய முற்றிட வுட்கொண்
டோ து கின்றதி ருப்புகழ் நித்தம்
பாடு மன்பது செய்ப்பதி யிற்றந் …… தவனீயே
தால முன்புப டைத்தப்ர புச்சந்
தேக மின்றிம திக்கவ திர்க்குஞ்
சாக ரஞ்சுவ றக்கிரி யெட்டுந் …… தலைசாயச்
சாடு குன்றது பொட்டெழ மற்றுஞ்
சூர னும்பொடி பட்டிட யுத்தஞ்
சாத கஞ்செய்தி ருக்கைவி திர்க்குந் …… தனிவேலா
ஆல முண்டக ழுத்தினி லக்குந்
தேவ ரென்புநி ரைத்தெரி யிற்சென்
றாடு கின்றத கப்பனு கக்குங் …… குருநாதா
ஆட கம்புனை பொற்குடம் வைக்குங்
கோபு ரங்களி னுச்சியு டுத்தங்
காவி னன்குடி வெற்பினை னிற்கும் …… பெருமாளே.