திருப்புகழ் பாடல் 159 – பழநி
ராகம் – ஹம்ஸநாதம்; தாளம் – ஆதி
தான தனதனன தான தனதனன
தான தனதனன …… தனதான
சீற லசடன்வினை காரன் முறைமையிலி
தீமை புரிகபடி …… பவநோயே
தேடு பரிசிகன நீதி நெறிமுறைமை
சீர்மை சிறிதுமிலி …… எவரோடுங்
கூறு மொழியதுபொய் யான கொடுமையுள
கோள னறிவிலியு …… னடிபேணாக்
கூள னெனினுமெனை நீயு னடியரொடு
கூடும் வகைமையருள் …… புரிவாயே
மாறு படுமவுணர் மாள அமர்பொருது
வாகை யுளமவுலி …… புனைவோனே
மாக முகடதிர வீ சு சிறைமயிலை
வாசி யெனவுடைய …… முருகோனே
வீறு கலிசைவரு சேவ கனதிதய
மேவு மொருபெருமை …… யுடையோனே
வீரை யுறைகுமர தீர தரபழநி
வேல இமையவர்கள் …… பெருமாளே.