திருப்புகழ் பாடல் 166 – பழநி
ராகம் – செஞ்சுருட்டி ; தாளம் – சதுஸ்ர த்ருவம்
எடுப்பு /4/4/40, கண்டநடை (35)
தனதனன தத்தான தானான தானதன
தனதனன தத்தான தானான தானதன
தனதனன தத்தான தானான தானதன …… தனதான
தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம்
விழிவலி வறட்சூலை காயாசு வாசம்வெகு
சலமிகு விஷப்பாக மாயாவி காரபிணி …… யணுகாதே
தலமிசை யதற்கான பேரோடு கூறியிது
பரிகரி யெனக்காது கேளாது போலுமவர்
சரியும்வய துக்கேது தாணர்சொ லீரெனவும் …… விதியாதே
உலைவறவி ருப்பாக நீள்காவின் வாசமலர்
வகைவகை யெடுத்தேதொ டாமாலி காபரண
முனதடியி னிற்சூட வேநாடு மாதவர்க …… ளிருபாதம்
உளமது தரித்தேவி னாவோடு பாடியருள்
வழிபட எனக்கேத யாவோடு தாளுதவ
உரகம தெடுத்தாடு மேகார மீதின்மிசை …… வரவேணும்
அலைகட லடைத்தேம காகோர ராவணனை
மணிமுடி துணித்தாவி யேயான ஜானகியை
அடலுட னழைத்தேகொள் மாயோனை மாமனெனு …… மருகோனே
அறுகினை முடித்தோனை யாதார மானவனை
மழுவுழை பிடித்தோனை மாகாளி நாணமுனம்
அவைதனில் நடித்தோனை மாதாதை யேஎனவும் …… வருவோனே
பலகலை படித்தோது பாவாணர் நாவிலுறை
யிருசரண வித்தார வேலாயு தாவுயர்செய்
பரண்மிசை குறப்பாவை தோள்மேவ மோகமுறு …… மணவாளா
பதுமவய லிற்பூக மீதேவ ரால்கள் துயில்
வருபுனல் பெருக்காறு காவேரி சூழவளர்
பழநிவரு கற்பூர கோலாக லாவமரர் …… பெருமாளே.