திருப்புகழ் பாடல் 205 – சுவாமி மலை
ராகம் – அடாணா; தாளம் – அங்கதாளம் (5 1/2)
தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2
தனதன தனந்த தான தனதன தனந்த தான
தனதன தனந்த தான …… தனதான
இருவினை புனைந்து ஞான விழிமுனை திறந்து நோயி
னிருவினை யிடைந்து போக …… மல்முட
விருளற விளங்கி யாறு முகமொடு கலந்து பேத
மிலையென இரண்டு பேரு …… மழகான
பரிமள சுகந்த வீத மயமென மகிழ்ந்து தேவர்
பணியவிண் மடந்தை பாத …… மலர்தூவப்
பரிவுகொ டநந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து பாட
பருமயி லுடன்கு லாவி …… வரவேணும்
அரியய னறிந்தி டாத அடியிணை சிவந்த பாதம்
அடியென விளங்கி யாடு …… நடராஜன்
அழலுறு மிரும்பின் மேனி மகிழ்மர கதம்பெ ணாகம்
அயலணி சிவன்பு ராரி …… யருள்சேயே
மருவலர் கள்திண்ப ணார முடியுடல் நடுங்க ஆவி
மறலியுண வென்ற வேலை …… யுடையோனே
வளைகுல மலங்கு காவி ரியின்வட புறஞ்சு வாமி
மலைமிசை விளங்கு தேவர் …… பெருமாளே.