திருப்புகழ் பாடல் 227 – சுவாமி மலை
தனதான தத்ததன தனதான தத்ததன
தனதான தத்ததன …… தனதான
பலகாதல் பெற்றிடவு மொருநாழி கைக்குளொரு
பலனேபெ றப்பரவு …… கயவாலே
பலபேரை மெச்சிவரு தொழிலேசெ லுத்தியுடல்
பதறாமல் வெட்கமறு …… வகைகூறி
விலகாத லச்சைதணி மலையாமு லைச்சியர்கள்
வினையேமி குத்தவர்கள் …… தொழிலாலே
விடமேகொ டுத்துவெகு பொருளேப றித்தருளும்
விலைமாதர் பொய்க்கலவி …… யினிதாமோ
மலையேயெ டுத்தருளு மொருவாள ரக்கனுடல்
வடமேரெ னத்தரையில் …… விழவேதான்
வகையாவி டுத்தகணை யுடையான்ம கிழ்ச்சிபெறு
மருகாக டப்பமல …… ரணிமார்பா
சிலகாவி யத்ததுறைக ளுணர்வோர்ப டித்ததமிழ்
செவியார வைத்தருளு …… முருகோனே
சிவனார்த மக்குரிய வுபதேச வித்தையருள்
திருவேர கத்தில்வரு …… பெருமாளே.