திருப்புகழ் பாடல் 310 – காஞ்சீபுரம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம் …… தனதான
கனகதம் பத்தைச் செச்சையை மெச்சுங்
கடகசங் கத்துப் பொற்புய வெற்பன்
கடலுள்வஞ் சித்துப் புக்கதொர் கொக்கும் …… பொடியாக
கறுவுசெஞ் சத்திப் பத்மக ரத்தன்
குமரனென் றர்ச்சித் தப்படி செப்புங்
கவிமொழிந் தத்தைக் கற்றற வுற்றும் …… புவியோர்போய்
குனகியுங் கைக்குக் கற்பக மொப்பென்
றனகனென் றிச்சைப் பட்டத ளிக்குங்
குமணனென றொப்பிட் டித்தனை பட்டிங் …… கிரவான
குருடுகொண் டத்தச் சத்தம னைத்துந்
திருடியுஞ் சொற்குத் தக்கதொ டுத்துங்
குலவியுங் கத்தப் பட்டக லக்கந் …… தெளியாதோ
சனகனன் புற்றுப் பெற்றம டப்பெண்
தனிப்பெருங் கற்புச் சக்ரந டத்துந்
தகையிலங் கைச்சுற் றத்தைமு ழுத்துஞ் …… சுடவேவெஞ்
சமரசண் டக்கொற் றத்தவ ரக்கன்
கதிர்விடும் பத்துக் கொத்துமு டிக்குந்
தனியொரம் பைத்தொட் டுச்சுரர் விக்னங் …… களைவோனும்
தினகரன் சொர்க்கத் துக்கிறை சுக்ரன்
சசிதரன் திக்குக் கத்தர கத்யன்
திசைமுகன் செப்பப் பட்டவ சிட்டன் …… திரள்வேதஞ்
செகதலஞ் சுத்தப் பத்தியர் சித்தம்
செயலொழிந் தற்றுப் பெற்றவர் மற்றும்
சிவனும்வந் திக்கக் கச்சியில் நிற்கும் …… பெருமாளே.