Thiruppugazh Song 71 – திருப்புகழ் பாடல் 71

திருப்புகழ் பாடல் 71 – திருச்செந்தூர்
ராகம் – தந்யாஸி ; தாளம் – ஸங்கீர்ணசாபு (4 1/2)
தகதிமி-2, தகிட-1 1/2, தக-1 ; (எடுப்பு – அதீதம்)

தனத்தத் தந்தனந் தனத்தத் தந்தனம்
தனத்தத் தந்தனம் …… தனதான

நிதிக்குப் பிங்கலன் பதத்துக் கிந்திரன்
நிறத்திற் கந்தனென் …… றினைவொரை

நிலத்திற் றன்பெரும் பசிக்குத் தஞ்சமென்
றரற்றித் துன்பநெஞ் …… சினில்நாளும்

புதுச்சொற் சங்கமொன் றிசைத்துச் சங்கடம்
புகட்டிக் கொண்டுடம் ……பழிமாயும்

புலத்திற் சஞ்சலங் குலைத்திட் டுன்பதம்
புணர்க்கைக் கன்புதந் …… தருள்வாயே

மதித்துத் திண்புரஞ் சிரித்துக் கொன்றிடும்
மறத்திற் றந்தைமன் …… றினிலாடி

மழுக்கைக் கொண்டசங் கரர்க்குச் சென்றுவண்
டமிழ்ச்சொற் சந்தமொன் …… றருள்வோனே

குதித்துக் குன்றிடந் தலைத்துச் செம்பொனுங்
கொழித்துக் கொண்டசெந் …… திலின்வாழ்வே

குறப்பொற் கொம்பைமுன் புனத்திற் செங்கரங்
குவித்துக் கும்பிடும் …… பெருமாளே.