திருப்புகழ் பாடல் 74 – திருச்செந்தூர்
தந்தனா தந்தனத் தந்தனா தந்தனத்
தந்தனா தந்தனத் …… தனதான
பங்கமே வும்பிறப் பந்தகா ரந்தனிற்
பந்தபா சந்தனிற் …… றடுமாறிப்
பஞ்சபா ணம்படப் புண்படா வஞ்சகப்
பண்பிலா டம்பரப் …… பொதுமாதர்
தங்களா லிங்கனக் கொங்கையா கம்படச்
சங்கைமால் கொண்டிளைத் …… தயராதே
தண்டைசூழ் கிண்கிணிப் புண்டாண கந்தனை
தந்துநீ யன்புவைத் …… தருள்வாயே
அங்கைவேல் கொண்டரக் கன்ப்ரதா பங்கெடுத்
தண்டவே தண்டமுட் …… படவேதான்
அஞ்சவே திண்டிறற் கொண்டலா கண்டலற்
கண்டலோ கங்கொடுத் …… தருள்வோனே
திங்களார் கொன்றைமத் தந்துழாய் துன்றுபொற்
செஞ்சடா பஞ்சரத் …… துறுதோகை
சிந்தையே தென்றிசைத் தென்றல்வீ சும்பொழிற்
செந்தில்வாழ் செந்தமிழ்ப் …… பெருமாளே.