திருப்புகழ் பாடல் 80 – திருச்செந்தூர்
தான தானனந் தானனந் தானதன
தான தானனந் தானனந் தானதன
தான தானனந் தானனந் தானதன …… தந்ததானா
பாத நூபுரம் பாடகஞ் சீர்கொள்நடை
யோதி மோகுலம் போலசம் போகமொடு
பாடி பாளிதங் காருகம் பாவையிடை …… வஞ்சிபோலப்
பாகு பால்குடம் போலிரண் டானகுவ
டாட நீள்வடஞ் சேரலங் காரகுழல்
பாவ மேகபொன் சாபமிந் தேபொருவ …… ரந்தமீதே
மாதர் கோகிலம் போல்கரும் பானமொழி
தோகை வாகர்கண் டாரைகொண் டாடிதகை
வாரும் வீடெயென் றோதிதம் பாயல்மிசை …… யன்புளார்போல்
வாச பாசகஞ் சூதுபந் தாடஇழி
வேர்வை பாயசிந் தாகுகொஞ் சாரவிழி
வாகு தோள்கரஞ் சேர்வைதந் தாடுமவர் …… சந்தமாமோ
தீத தோதகந் தீததிந் தோதிதிமி
டூடு டூடுடுண் டூடுடுண் டூடுடுடு
டீகு டீகுகம் போலவொண் பேரிமுர …… சங்கள்வீறச்
சேடன் மேருவுஞ் சூரனுந் தாருகனும்
வீழ ஏழ்தடந் தூளிகொண் டாடமரர்
சேசெ சேசெயென் றாடநின் றாடிவிடு …… மங்கிவேலா
தாதை காதிலங் கோதுசிங் காரமுக
மாறும் வாகுவுங் கூரசந் தானசுக
தாரி மார்பலங் காரியென் பாவைவளி …… யெங்கள்மாதைத்
தாரு பாளிதஞ் சோரசிந் தாமணிக
ளாட வேபுணர்ந் தாடிவங் காரமொடு
தாழை வானுயர்ந் தாடுசெந் தூரிலுறை …… தம்பிரானே.