திருப்புகழ் பாடல் 87 – திருச்செந்தூர்
தனதனன தந்த தனதனன தந்த
தனதனன தந்த …… தனதானா
மனைகனக மைந்தர் தமதழகு பெண்டிர்
வலிமைகுல நின்ற …… நிலையூர்பேர்
வளரிளமை தஞ்ச முனைபுனைவ ளங்கள்
வரிசைதம ரென்று …… வருமாயக்
கனவுநிலை யின்ப மதனையென தென்று
கருதிவிழி யின்ப …… மடவார்தம்
கலவிமயல் கொண்டு பலவுடல்பு ணர்ந்து
கருவில்விழு கின்ற …… தியல்போதான்
நினையுநின தன்பர் பழவினைக ளைந்து
நெடுவரைபி ளந்த …… கதிர்வேலா
நிலமுதல் விளங்கு நலமருவு செந்தில்
நிலைபெறஇ ருந்த …… முருகோனே
புனைமலர்பு னைந்த புனமறம டந்தை
புளகஇரு கொங்கை …… புணர்மார்பா
பொருதுடனெ திர்ந்த நிருதர்மகு டங்கள்
பொடிபடந டந்த …… பெருமாளே.