திருப்புகழ் பாடல் 24 – திருச்செந்தூர்
தந்தத் தனனத் தந்தத் தனனத்
தந்தத் தனனத் …… தனதானா
அம்பொத் தவிழித் தந்தக் கலகத்
தஞ்சிக் கமலக் …… கணையாலே
அன்றிற் குமனற் றென்றற் குமிளைத்
தந்திப் பொழுதிற் …… பிறையாலே
எம்பொற் கொடிமற் றுன்பக் கலனற்
றின்பக் கலவித் …… துயரானாள்
என்பெற் றுலகிற் பெண்பெற் றவருக்
கின்பப் புலியுற் …… றிடலாமோ
கொம்புக் கரிபட் டஞ்சப் பதுமக்
கொங்கைக் குறவிக் …… கினியோனே
கொன்றைச் சடையற் கொன்றைத் தெரியக்
கொஞ்சித் தமிழைப் …… பகர்வோனே
செம்பொற் சிகரப் பைம்பொற் கிரியைச்
சிந்தக் கறுவிப் …… பொரும்வேலா
செஞ்சொற் புலவர்க் கன்புற் றதிருச்
செந்திற் குமரப் …… பெருமாளே.