திருப்புகழ் பாடல் 43 – Thiruppugazh Song 43 – களபம் ஒழுகிய: Kalabam Ozhukiya

திருப்புகழ் பாடல் 43 – திருச்செந்தூர்

தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன …… தனதான

களபம் ஒழுகிய புளகித முலையினர்
கடுவும் அமிர்தமும் விரவிய விழியினர்
கழுவு சரிபுழு கொழுகிய குழலினர் …… எவரோடுங்

கலகம் இடுகயல் எறிகுழை விரகியர்
பொருளில் இளைஞரை வழிகொடு மொழிகொடு
தளர விடுபவர் தெருவினில் எவரையும் …… நகையாடிப்

பிளவு பெறிலதி லளவள வொழுகியர்
நடையில் உடையினில் அழகொடு திரிபவர்
பெருகு பொருள்பெறில் அமளியில் இதமொடு …… குழைவோடே

பிணமும் அணைபவர் வெறிதரு புனலுணும்
அவச வனிதையர் முடுகொடும் அணைபவர்
பெருமை யுடையவர் உறவினை விடஅருள் …… புரிவாயே

அளையில் உறைபுலி பெறுமக வயிறரு
பசுவின் நிரைமுலை யமுதுண நிரைமகள்
வசவ னொடுபுலி முலையுண மலையுடன் …… உருகாநீள்

அடவி தனிலுள உலவைகள் தளிர்விட
மருள மதமொடு களிறுகள் பிடியுடன்
அகல வெளியுயர் பறவைகள் நிலம்வர …… விரல்சேரேழ்

தொளைகள் விடுகழை விரல்முறை தடவிய
இசைகள் பலபல தொனிதரு கருமுகில்
சுருதியுடையவன் நெடியவன் மனமகிழ் …… மருகோனே

துணைவ குணதர சரவண பவநம
முருக குருபர வளரறு முககுக
துறையில் அலையெறி திருநகர் உறைதரு …… பெருமாளே.