Abirami Andhathi Lyrics in Tamil – Songs 21 to 30

இறைவன் பூஜை செய்யாத பாவம் நீங்க

மங்கலை செங்கலசம் முலையாள் மலையாள் வருணச்
சங்கலை செங்கைச் சகலகலா மயில் தாவுகங்கை
பொங்கலை தங்கும் புரிசடையோன் புடை ஆளுடையாள்
பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும் பெண்கொடியே. 21

பிறவா வரம் பெற

கொடியே இளவஞ்சிக் கொம்பே எனக்குவம்பே பழுத்த
படியே மறையின் பரிமளமே பனிமால் இமயப்
படியே பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே
அடியேன் இறந்து இங்கினிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே. 22

மனச்சஞ்சலம் நீங்க

கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது அன்பர் கூட்டந்தன்னை
உள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு
உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளதே விளைந்த
கள்ளே களிக்கும் களியே அளிய என் கண்மணியே. 23

நோய்கள் நீங்க

மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த
அணியே அணியும் அணிக்கழகே அனுகதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெரு விருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே. 24

நினைத்தவை யாவும் தடைகளின்றி ஈடேற

பின்னே திரிந்துன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவருக்கும்
அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே
என்னே இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே. 25

வாக்கில் வன்மையும் செல்வாக்கும் பெற்றிட

ஏத்தும் அடியவர் ஈரேழுலகினையும்படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவராம் கமழ் பூங்கடம்பு
சாத்தும் குழல் அணங்கே மணம் நாறும் நின் தாளிணைக்கென்
நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே. 26

அம்பிகை அருள்பெற்றிட

உடைத்தனை வஞ்சப் பிறவி உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால்
துடைத்தனை சுந்தரி நின்னருள் ஏதென்று சொல்லுவதே. 27

சகல சுகங்களும் பெற

சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே நின் புதுமலர்த்தாள்
அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியாத அரசும்
சொல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே. 28

சகலகாரிய சித்தி பெற

சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பரா
சக்தியும் சக்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார்
முக்தியும் முக்திக்கு வித்தும் வித்தாகி முளைத்தெழுந்த
புத்தியும் புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தையன்றே. 29

தொடர் துன்பங்கள் நீங்க

அன்றே தடுத்து என்னை ஆண்டு கொண்டாய் கொண்டது அல்ல என்கை
நன்றே உனக்கினி நான் ஏன் செயினும் நடுக்கடலுள்
சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமே
ஒன்றே பலவுருவே அருவே என் உமையவளே. 30