மறுமையில் இன்பம் உண்டாக
உமையும் உமையொரு பாகனும் ஏக உருவில் வந்திங்கு
எமையும் தமக்கன்பு செய்யவைத்தார் இனி எண்ணுதற்குச்
சமயங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை
அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே. 31
அம்பிகை ஆசி பெற்றிட
ஆசைக் கடலில் அகப்பட்டருள் அற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லற்பட இருந்தேனை நின்பாதம் எனும்
வாசக் கமலம் தலைமேல் வலியவைத்து ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுவேன் ஈசர் பாகத்து நேரிழையே. 32
அன்னையின் நினைவு அகலதிருக்க
இழைக்கும் வினைவழியே அடும்காலன் எனை நடுங்க
அழைக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய் அந்தர் சித்தர் எல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே
உழைக்கும் போழுதுன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே. 33
இறையார்க்கு உதவிட
வந்தே சரணம் புகும் அடியாருக்கு வானுலகம்
தந்தே பரிவோடு தான் போய் இருக்கும் சதுர்முகம்
பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமும் பாகமும் பொற்
செந்தேன் மலரும் அலர்கதிர் ஞாயிறும் திங்களுமே. 34
கடிமணம் நிகழ
திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னிவைக்க
எங்கட்கொரு தவம் எய்தியவா எண்ணிறந்த விண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ தரங்கக் கடலுள்
வெங்கட் பணி ஆணை மேல் துயில் கூறும் விழுப்பொருளே. 35
முன் வினைகள் போக
பொருளே பொருள்முடிக்கும் போகமே அரும்போகம் செய்யும்
மருளே மருளில் வரும் தெருளே என் மனத்து வஞ்சத்து
இருள் ஏதும் இன்றி ஒளிவெளி ஆகி இருக்கும் உன்றன்
அருள்ஏது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே. 36
பொன்,பொருள் பெற
கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண் முத்து மாலை விட அரவின்
பைக்கே அணிவது பன்மணிக் கோவையும் பட்டும் எட்டுத்
திக்கே அணியும் திருவுடையான் இடம் சேர்பவளே. 37
வேண்டியதைப் பெற
பவளக் கொடியிற் பழுத்த செவ்வாயும் பனிமுறுவல்
தவளத் திருநகையும் துணையா எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணைமுலையாள்
அவளை பணிமின் கண்டீர் ஆளுகைக்கே. 38
அனைத்திலும் தேர்ச்சி பெற
ஆளுகைக்கு உன்றன் அடித்தாமரைகள் உண்டு அந்தகன்பால்
மீளுகைக்கு உன்றன் விழியன் கடை உண்டு மேல் இவற்றின்
மூளுகைக்கு என்குறை நின்குறையே அன்று முப்புரங்கள்
மாளுகைக்கு அம்பு தொடுத்தவில்லான் பங்கில் வாழ்நுதலே. 39
பூர்வ புண்ணியப் பலன் பெற
வாணுதற் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியைப் பேதைநெஞ்சிற்
காணுதற்குண்ணியள் அல்லாத கன்னியைக் காணும் அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன் செய் புண்ணியமே. 40