Thiruppugazh Song 115- திருப்புகழ் பாடல் 115

திருப்புகழ் பாடல் 115 – பழநி

தத்தா தனத்ததன தத்தா தனத்ததன
தானத் தனந்ததன தானத் தனந்ததன …… தனதனதான

இத்தா ரணிக்குள்மநு வித்தாய் முளைத்தழுத
கேவிக் கிடந்துமடி மீதிற் றவழ்ந்தடிகள்
தத்தா தனத்ததன இட்டே தெருத்தலையில்
ஓடித் திரிந்துநவ கோடிப் ப்ரபந்தகலை
யிச்சீர் பயிற்றவய தெட்டொடு மெட்டுவர
வாலக் குணங்கள்பயில் கோலப் பெதும்பையர்க …… ளுடனுறவாகி

இக்கார் சரத்துமத னுக்கே இளைத்துவெகு
வாகக் கலம்பவகை பாடிப் புகழ்ந்துபல
திக்கோடு திக்குவரை மட்டோ டி மிக்கபொருள்
தேடிச் சுகந்தஅணை மீதிற் றுயின்றுசுக
மிட்டா தரத்துருகி வட்டார் முலைக்குளிடை
முழ்கிக் கிடந்துமய லாகித் துளைந்துசில …… பிணியமுடிச்

சத்தான புத்தியது கெட்டே கிடக்கநம
னோடித் தொடர்ந்துகயி றாடிக் கொளும்பொழுது
பெற்றோர்கள் சுற்றியழ வுற்றார்கள் மெத்தஅழ
ஊருக் கடங்கலிலர் காலற் கடங்கவுயிர்
தக்கா திவர்க்குமய னிட்டான் விதிப்படியி
னோலைப் பழம்படியி னாலிற் றிறந்ததென …… எடுமெனவோடிச்

சட்டா நவப்பறைகள் கொட்டா வரிச்சுடலை
யேகிச் சடம்பெரிது வேகப் புடஞ்சமைய
இட்டே யனற்குளெரி பட்டா ரெனத்தழுவி
நீரிற் படிந்துவிடு பாசத் தகன்றுனது
சற்போ தகப்பதும முற்றே தமிழ்க்கவிதை
பேசிப் பணிந்துருகு நேசத்தை யின்றுதர …… இனிவரவேணும்

தித்தா திரித்திகுட தத்தா தனத்தகுத
தாதத் தனந்ததன தானத் தனந்ததன
செச்சே செகுச்செகுகு தித்தா திமித்ததிகு
தாதத்த செந்திகுத தீதத்த செந்தரிக
தித்தா கிடக்கணக டக்கா குகுக்குகுகு
தோதக் கணங்கணக கூகுக் கிணங்கிணென …… ஒருமயிலேறித்

திட்டே ரதத்தசுரர் பட்டே விழப்பொருது
வேலைத் தொளைந்துவரை யேழைப் பிளந்துவரு
சித்தா பரத்தமரர் கத்தா குறத்திமுலை
மீதிற் புணர்ந்துசுக லீலைக் கதம்பமணி
சுத்தா வுமைக்குமொரு முத்தாய் முளைத்தகுரு
நாதக் குழந்தையென வோடிக் கடம்பமலர் …… அணிதிருமார்பா

மத்தா மதக்களிறு பிற்றா னுதித்தகுக
னேதத் திலங்கையினி லாதிக்க முண்டதொரு
முட்டா ளரக்கர்தலை யிற்றே விழக்கணைக
ளேதொட்ட கொண்டலுரு வாகிச் சுமந்ததிக
மட்டார் மலர்க்கமல முற்றா சனத்திருவை
மார்பிற் புணர்ந்தரகு ராமற்கு மன்புடைய …… மருமகனாகி

வற்றா மதுக்கருணை யுற்றே மறைக்கலைக
ளோதித் தெரிந்துதமிழ் சோதித் தலங்கலணி
யத்தா பரத்தையறி வித்தாவி சுற்றுமொளி
யாகிப் ப்ரபந்தமணி வேல்தொட்ட மைந்தபுய
வர்க்கா மருப்புழுகு முட்டா திருப்பழநி
வாழவுக் குகந்தடிய ராவிக்குள் நின்றுலவி …… வருபெருமாளே.