Sabarimala Vratham Dos and Don’ts in Tamil

ஐயப்பனுக்கு மாலை அணிந்து கடைப்பிடிக்க வேண்டிய விரத முறைகள்!

கார்த்திகை மாதம் என்றாலே பக்திமயமான மாதமாக சொல்லலாம். கார்த்திகை மாதத்தில், இந்துக்களின் முக்கிய விழாக்களான கார்த்திகை தீபம், முருகனுக்கு கார்த்திகை விரதம் மற்றும் ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருத்தல் போன்றவை முக்கிய பக்தி திருவிழாக்கள் என்றே சொல்லலாம். இதிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஐயப்பன் விரதம் ஆகும் ஏனெனில் இந்தியாவில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஐயப்ப பக்தியில் மூழ்கிப் போகின்றனர். இவர்கள் ஐயப்பனுக்காக மாலை அணிந்து பக்திச் செறிவுடன் ஐயப்பன் நாமத்தைச் சொல்லி விரதம் அனுசரிக்கிறார்கள். ஐயப்பன் கலியுக வரதன்; கலிகால தோஷத்தை அகற்ற ஐயப்பனைத் தரிசித்தால் போதும் என்கிற உணர்வு மேலிடுகிறது. ஆண்டுதோறும் இருமுடி ஏந்தி, சபரிமலைக்குப் புனித யாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது. கடுமையான முறையில் அனைத்து விதமான விரதங்களையும் கடைப் பிடிக்கும் மாலையிட்ட ஐயப்ப பக்தன், சுவாமி ஐயப்பனின் பரிபூரண அனுக்கிரகம் பெற்றிருப்பதால், பக்தனையே ஐயப்பனின் அவதாரமாக மற்றவர்கள் மதிக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலை செல்வோர் மேற்கொள்ள வேண்டிய விரத முறைகள் :

  1. சபரிமலை செல்ல விரும்புபவர்கள் கார்த்திகை மாதம் முதல் நாளோ அல்லது 19ஆம் தேதிக்குள்ளோ ஒரு நாளில் மாலை அணிய வேண்டும். கார்த்திகை மாதம் முதல் நாள், மாலை அணிந்தால் நாள் பார்க்க வேண்டாம். அதற்குப் பின் அணிபவர்கள் நல்ல நாள் பார்த்து மாலை அணிய வேண்டும். எப்படி இருந்தாலும் குறைந்தது 41 நாட்கள் விரதமிருக்க வேண்டும்.
  2. மாலை, துளசி மணி 108 கொண்டதாகவோ, உருத்திராட்ச மணி 54 உள்ளதாகவோ வாங்கி, அதில் ஐயப்பன் திருவுருவம் பதித்த டாலர் ஒன்றையும் இணைத்து அணிய வேண்டும்.
  3. தாய் தந்தையின் நல்லாசியுடன், குருசாமி ஒருவரின் கையால் ஆலயத்தில் பூஜை செய்து மாலை அணிய வேண்டும். குருசாமி கிடைக்காவிட்டால் கோயில் சென்று, கடவுள் பாதத்தில் மாலையை வைத்து, அர்ச்சகரிடம் தட்சணை கொடுத்து, அர்ச்சனை செய்து ஐயப்பனையே குருவாக நினைத்து மாலையை தரிசித்துக் கொள்ளலாம். இது எதுவுமே முடியாவிட்டால் கடவுளின் பிரதிநிதியான தமது தாயிடம் ஆசிர்வாதம் வாங்கி அவர்களது கையால் மாலையை அணிந்து கொள்ளலாம்.
  4. இவ்வாறு மாலை அணிந்த பின்பு கோபதாபம், குரோதம், விரோதம் கொள்ளக்கூடாது. அண்டை, அயலாருடன் விரோதம் மறந்து, சிநேகம் பாராட்டி, பணிவுடன் பழகவேண்டும். இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையுமே இறைவனின் சொரூபமாகப் பார்க்க வேண்டும்.
  5. காலையில் சூரிய உதயத்துக்கு முன்பும், மாலையிலும் குளிர்ந்த நீரில் நீராடி கோவில்களிலோ, வீடுகளிலோ ஐயப்பனை மனதார நினைத்து சரணங்கள் கூறி வணங்க வேண்டும்.
  6. கருப்பு, நீலம், காவி, பச்சை நிற வேட்டி, சட்டை அணியவேண்டும்.
  7. பிரம்மச்சரிய விரதத்தை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.
  8. மாலையை எக்காரணம் கொண்டும் கழற்றக்கூடாது.
  9. ரத்த சம்பந்தமுள்ளவர்களின் மரணம் ஏற்பட்டால் குருசாமியிடம் சென்று மாலையை கழற்றிய பிறகே, துக்கத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
  10. ஏதாவது ஒரு காரணத்தால் மாலையை கழற்ற நேர்ந்தால் அந்த ஆண்டு சபரிமலை செல்லக்கூடாது.
  11. பெண்களின் சடங்கு வைபவத்துக்கோ, குழந்தை பிறந்த வீட்டிற்கோ செல்லக்கூடாது.
  12. மது, மாமிசம், புகைபிடித்தலை விட்டுவிட வேண்டும்.
  13. மாலை அணிந்த பக்தர்களின் வீட்டில் சாப்பிடலாம். மற்றவர்கள் வீட்டில் பால், பழம் சாப்பிடலாம்.
  14. வீட்டுப்பெண்களுக்கு மாலை அணிந்த காலத்தில் மாதவிடாய் ஏற்பட்டால், ஏழுநாட்கள் கழித்த பின்னர் தான் அவர்கள் சமைத்த உணவை உண்ணவேண்டும்.
  15. காலணிகள் பயன்படுத்தக்கூடாது.
  16. கன்னிச் சாமிகள் தங்களின் வசதிக்கேற்ப வீடுகளில் பூஜைகள் நடத்தி ஐயப்பன்மார்களுக்கும் ஏழைகளுக்கும் அன்னதானம் செய்விக்கலாம்.
  17. எதிர்ப்படும் ஐயப்ப பக்தர்களை ஐயப்பனாகவும், பெண்களை மாளிகைப் புறத்தம்பிகையாகவும் கருதிப் பழக வேண்டும்.
  18. மற்றவர்களிடம் பேசும் பொழுது சாமி சரணம் எனத் தொடங்கி, விடைபெறும் பொழுது சாமி சரணம் எனக் கூற வேண்டும்.
  19. இருமுடிக்கட்டு பூஜையை வீட்டிலோ, குருசாமி இடத்திலோ, கோவில்களிலோ வைத்து நடத்த வேண்டும்.
  20. சபரிமலைப் பயணம் புறப்படுகையில் யாரிடமும் போய் வருகிறேன் எனக் கூறக்கூடாது.
  21. பம்பை நதியில் நீராடும் பொழுது மறைந்த தமது முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு ஈமக்கடன்களைச் செய்து நீராட வேண்டும்.
  22. யாத்திரை முடிந்து வீடு திரும்பியதும், ஐயப்பனின் அருள் பிரசாதக் கட்டினைத் தலையில் ஏந்திய படியே வீட்டு வாயில்படியில் விடலைத் தேங்காய் அடித்து வீட்டினுள் நுழைய வேண்டும்.
  23. வீட்டில் பூஜை அறையில் பூஜை செய்து, கட்டினைப் பிரித்து, பிரசாதங்களை விநியோகம் செய்ய வேண்டும்.
  24. யாத்திரை இனிய முறையில் நிறைவுற்றபின் குருநாதர் அல்லது தாயார் மூலம் மாலை கழற்றும் போது சொல்லும் மந்திரத்தை கூறி மாலையைக் கழற்றி,சந்தனத்தில் நனைத்து ஐயப்பன் திருவுருவப் படத்திற்கு முன்னால் வைத்து விட்டு தீபாராதனை காட்டி விரதம் முடிக்க