2017 சனிப்பெயர்ச்சி மேஷம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?
When is Sani Peyarchi in 2017?
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் – அனைத்து ராசிகளுக்கும்
சாதுர்யமாகப் பேசி சாதிக்கும் மேஷ ராசிக்காரர்களே…!
உங்கள் ராசிக்கு, 19.12.17 முதல் 26.12.20 வரை 9-ல் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார் சனிபகவான். புதிய வியூகங்களால் எதிலும் சாதிப்பீர்கள். நீண்டகாலமாகத் தடைப்பட்டு வந்த வேலைகளை எளிதாக முடிப்பீர்கள். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். வராது என்று நினைத்த கடன் தொகை வந்து சேரும். சிலர் வீட்டை விரிவுபடுத்துவீர்கள். பகை வர்களும் நண்பர்கள் ஆவார்கள். நோய் பாதிப்புகள் விலகும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். அடகில் இருந்த நகைகளை மீட்பீர்கள். எனினும், தந்தைக்கு சிறுசிறு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். பிதுர்வழிச் சொத்துப் பிரச்னை தலைதூக்கும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும்.
சனிபகவானின் பார்வைப் பலன்கள்
சனி பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டைப் பார்ப்பதால், எதிலும் வெற்றி பெறுவீர்கள். சிலர் புதுப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். சனிபகவான் 6-ம் வீட்டைப் பார்ப்பதால், பழைய கடன்களைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். சனிபகவான் லாப வீட்டைப் பார்ப்பதால், கடின வேலைகளையும் சாமர்த்தியமாக செய்து முடிப்பீர்கள். வரவும் உண்டு செலவும் உண்டு.உங்களில் சிலர் புதுத் தொழில் தொடங்குவீர்கள்.
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பாக்கித் தொகைகள் வசூலாகும். மக்களின் ரசனைக்கேற்ப கொள்முதல் செய்வீர்கள். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்வீர்கள். கூட்டுத் தொழில் வளர்ச்சி அடையும். வங்கிக் கடனை அடைப்பீர்கள். கெமிக்கல், இரும்பு, போர்டிங், லாட்ஜிங், எண்ணெய் வகைகளால் லாபம் உண்டாகும்.
உத்தியோகத்தில், சக ஊழியர்களாலும், அதிகாரி களாலும் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். எதிர்பார்த்து தடைப்பட்ட பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியன கிடைக்கும். சிலருக்கு வேலையின் காரணமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.
மாணவ மாணவிகளே! கடுமையாக உழைப்பீர்கள். விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். கலைத் துறையினரே! பிற மொழி பேசுபவர்களால் புது வாய்ப்பு கள் வரும். அரசால் ஆதாயம் உண்டாகும்.
மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, உங்களை சாதிக்க வைப்பதாக அமையும்.
சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:
19.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் திடீர் திருப்பம் ஏற்படும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். ஆனால், அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் விவாதங்கள், செலவுகள், அலர்ஜி, மறைமுக எதிர்ப்புகள் வந்து செல்லும்.
உங்கள் ராசிக்கு 2 மற்றும் 7-ம் வீடுகளுக்கு அதிபதியான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில், 19.1.19 முதல் 11.8.19 மற்றும் 27.9.19 முதல் 24.2.20 மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரை சனி செல்வதால், புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். இங்கிதமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். தடைப்பட்ட திருமணம் கூடிவரும். வாழ்க்கைத்துணை வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது வேலை, நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சளித் தொந்தரவு, காய்ச்சல் ஏற்பட்டு நீங்கும்.
உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டுக்கு உரிய சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் 25.2.20 முதல் 16.7.20 மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனிபகவான் செல்வதால், பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சற்று தாமதமாகும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது. கார்த்திகை நட்சத் திரத்தில் பிறந்தவர்கள் முன்கோபத்தைத் தவிர்க்கவும்.
சனிபகவானின் வக்கிர சஞ்சாரம்:
சனிபகவான் 29.4.18 முதல் 11.9.18 வரை மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்கிரமாகச் செல்வதால், எந்த வேலையையும் திட்டமிட்டுச் செய் யவும். மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்கவேண்டாம். வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும். நரம்புத் தளர்ச்சி, கணுக்கால் வலி ஏற்பட்டு நீங்கும்.
சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 மற்றும் 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத் திரத்தில் வக்கிரமாகச் செல்வதால், கணவன்-மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்லவும். வீட்டுக்கான பராமரிப்புச் செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். அரசால் அனுகூலம் உண்டாகும்.
பரிகாரம்: ஸ்ரீபெரும்புதூரில் அருளும் பெருமாளையும் ராமாநுஜரையும் ஏகாதசி தினத்தில் வழிபட்டு வாருங்கள்; வாழ்வில் ஏற்றம் உண்டாகும்.