சிவன் பாமாலை | Sivan Pamalai

திருப்புலிவனம் சிவனார் பாமாலை (சிவஞான வள்ளலார்)

இயற்றியவர்  சிவஞான வள்ளலார்

            நூல்

  1. ஒன்றாகி உணர்வு ஒருங்கி ஓமொழிப் பொருள் தானாகி
    மன்றாடும் நின்னை அன்பின் வழிபடும் அறிவு ஒன்று இன்றிப்
    பொன் தாலி பூட்டும் மாதர் புணர்ச்சியே பொருள் என்று எண்ணிச்
    சென்றாடி உணங்கிப் போனேன் திருப்புலிவனத்துளானே!
  2.  நிராமய நிமலமாகி நித்திய ஆனந்தமாகிப்
    பராபரப் பிரமமாகிப் பங்கயன் முதல தேவர்
    சராசரம் அனந்த யோனி தத்துவக்குவால் பிறங்கத்
    திராசென நின்ற தென்னே? திருப்புலி வனத்துளானே!
  3. மலரயனாய்ப் படைத்தான், மாலவனாகிக் காத்தான்
    இலகரனாகி எல்லாம் துடைத்தவன் இறைவன் ஆனான்,
    மலை மகட்கு ஒருபால் ஈந்து மலிபுனல் கங்கையாளைச்
    சிலை மதி முடியில் வைத்தான் திருப்புலிவனத்துளானே!
  4. ஒருவனோடு ஒருத்தியாகி உடல்தொறும் குடியிருந்தான்;
    இருவினை ஒப்பாலன்றி யாவர்க்கும் அறிய வொண்ணான்;
    குருவடிவாகித் தாளார் கொடும்பவம் இரியச் சூட்டித்
    திரிபதார்த் தமும் தெரித்தான் திருப்புலிவனத்துளானே!
  5. பேசுவது உயிரே அந்தப் பிராணனுக்கு உயிரைப் பேசின்
    மாசிலா மணிஒருத்தன் வரவிலன் போக்குமில்லான்
    பாசமோ சகனாய் நிற்பன் அவன் உருப் பாராவண்ணம்
    ஆசையே பாசம் என்றான் வயப்புலி வனத்துளானே!
  6. நெல்லிடை உமி போல் ஆவி நினைப்பெலாம் ஆவரித்துத்
    தொல்லையில் உள அஞ்ஞானம் துஞ்சலும் பிறப்புமின்றி
    மல்லர் போன்று அறிவை வைய வனத்திடை வலிய ஈர்ப்பச்
    செல்கதி வேறு காணேன் திருப்புலிவனத்துளானே!
  7. மூலையில் இருந்த என்னை முற்றத்தில் ஈர்த்துவிட்டுச்
    சால மோகம் செய் மாயை தனுகர ணங்களாகி
    வேலை வாய் அமுதிருப்ப விடத்தையே விழுங்கப் பண்ணும்
    சீல நின் நினைய வொட்டாத் திருப்புலி வனத்துளானே!
  8. கன்மமாய் ஒன்றாய் ஊழாய்க்கருது இரு வினையாய் மூன்று
    வன்மைகொள் சஞ்சிதாதி வரு வினைக்காரர் வந்து உன்
    நன்மையை உணர வொட்டார் நல்லர்பால் செல்லவொட்டார்
    சின்மய மாக வொட்டார் திருப்புலிவனத்துளானே!
  9. வெறும் படம் போல்வை நீதான் வேறு வேறு ஓவியம் போல்,
    நறும் துழாய் முடியோன் ஈசன் நான்முகன் ஆதி தேவர்
    பெறும்பயன் உணர்ந்தோர் நின்னைப் பேணுவர் அவரைப் பேணார்
    தெறுங்கடை யுகத்திலாடும் திருப்புலிவனத்துளானே!
  10. பஞ்ச இந்திரியங்களென்னும் பாயிருள் சீக்கும் ஞானக்
    கஞ்சுகம் போர்த்து உன் பாதக் கழலடி பரவும் தொண்டர்
    நஞ்சையும் உண்பர் உன்போல், நாதனாய் ஞானமீவர்
    செஞ்சுடர் மணி பிறங்கும் திருப்புலிவனத்துளானே!
  11. காதினால் அறியா நின்னைக் கண்ணினால் காணா என்னை
    மேதை சேர் விவேகத்தாலும் வேதத்தார் விஞ்சையாலும்
    பாதத்துக்கு ஏற்ற தொண்டு பற்பல குயிற்றி அன்பால்
    சேதனங் கண்டு கொண்டேன் திருப்புலிவனத்துளானே!
  12. பாவமும் அறமும் ஒத்துப் பக்குவம் பருவமுற்று இங்கு
    ஆவி ஐம்புலனைப் பற்றாது அகமுக மாகியென்றும்
    ஓவியம் போன்றிட்டு அங்கண் உணர் உணராமை போக்கில்
    சீவனும் சிவனும் வேறோ? திருப்புலிவனத்துளானே!
  13. ஆகம் நாமல்ல இந்த ஐம்பொறி நாமே அல்ல
    வேகமே நாம் என்று உன்னும் இருடிகள் இதயத்து உள்ளாய்
    பாகமாம் உமை மணாள! பசுபதி! பிறவி வேண்டேன்
    சேகறு மனத்தோர் போற்றும் திருப்புலிவனத்துளானே!
  14. அறிவினில் அகம் உண்டாகி அகத்தினின் மனமுண்டாகிப்
    பிறிவரும் மனத்தின் மாயை மாயையிற் பிண்ட அண்டங்கள்
    மறியுலகத்தின் ஆக்கை வந்த இம்மாயம் எல்லாம்
    செறி தராது அருளிச் செய்வாய் திருப்புலிவனத்துளானே!
  15. புத்தியாய்ப் பொறிகளாகிப் புலன்களாய்ப் பூதமாகிக்
    கத்தனாய்க் காமமாதிக் குணங்களாய்க் காமியாகிப்
    பெத்தனாய் முத்தனாகிப் பேணுவார் பேணும் நித்த
    சித்தனாய் நின்றது என்னே! திருப்புலிவனத்துளானே!
  16. ஒன்பது வாய்தல் ஆர்ந்த ஊரினில் ஓர் ஐந்தாய
    துன்புறும் அமைச்சரோடும் சுகதுக்கத் தேவியோடும்
    முன் பினோடுற வரோடும் முற்றரசாள மாட்டேன்
    செம்பொனார் மாட நீடு திருப்புலிவனத்துளானே!

17.ஆரண உருவமாகி அம்பரக் கோயில் தோறும்
நாரணன் பிரமன் காணா நட்டம் நீ செய்தது என்னே?
காரணம் உயிரே என்னக் கண்டவர் காணாது ஏங்கச்
சீரணி மாடம் ஓங்கும் திருப்புலிவனத்துளானே!

  1. மாயையால் இரண்டுபட்டு உன் மலரடிப் புகல் இழந்தேன்
    தூய மெய்ஞ் ஞானத்தாலே துறந்திடின் ஏகமாகும்
    தாயினும் இனியனாகித் தடுத்து எனை ஆண்டு கொண்ட
    சேயமா நதி தென் பாங்கார் திருப்புலிவனத்துளானே!
  2. கண்ணொளி கதிரின் மாட்டும் கடவெளி விசும்பின் மாட்டும்
    மண்ணுறு விளக்கின் சோதி தாரக சத்தி மாட்டும்
    நண்ணு தன் மானப் பொல்லா நாயினேன் வந்தடைந்தேன்
    தெண்ணிலா எறிக்கும் சென்னித் திருப்புலிவனத்துளானே!
  3. பவத்துயரால் மெலிந்த பக்குவ உயிர்கட்கு எல்லாம்
    சிவத்தை முன் விளக்கிப் பின்னர் சீவனை விளக்கி மூன்றாம்
    அவத்தையை விளக்கி நீக்கி அறிவு உருவானாய் என்னும்
    சிவத்துவ மசி நீ அன்றோ திருப்புலிவனத்துளானே!
  4. காந்தமும் ஊசியும் போல் கடல் உறு நதியும் போல
    வேய்ந்து பின் நீ நானாகி எண்ணமும் இன்றி நின்று
    வாய்ந்த பேராக்கம் நீ சொல் வாக்கியத்தாலே கண்டேன்
    தேய்ந்த சந்திரனைச் சூடும் திருப்புலிவனத்துளானே!
  5. அறிவு ஒரு கடலாய் ஆவி அலையதாய்த் தத்துவங்கள்
    பிறினுரை குமிழி உப்புப் பிணை மலம் வாயு கன்மம்
    குறிபல மீனம் மாயை இவற்றினால் குறைவு ஒன்றில்லை
    செறி திருவருளான் மாற்றாய் திருப்புலிவனத்துளானே!
  6. புழுவினம் நிறையும் ஆக்கை ஒன்பது பொள்ளலாலும்
    இழிபடு மலங்கள் வீசும் இதனினும் நரகம் நன்றே
    வழுவையின் உரிபோர்த்தாடும் வள்ளலே பிறவிவேண்டேன்
    செழுமணி மாடம் ஓங்கும் திருப்புலிவனத்துளானே!
  7. பிறந்தவர் இறக்கையாலும் இறந்தவர் பிறக்கையாலும்
    அறிந்து உயர் பெரியோர் எல்லாம் ஆக்கையை வெறுத்தலாலும்
    மறந்தும் நான் பிறவி வேண்டேன் மறு பிறப்பிலாத வண்ணம்
    செறிந்தருள் செய்ய வேண்டும் திருப்புலிவனத்துளானே!
  8. அரன், அரி, அயனும் ஒன்றென்று அருமறை அறையுமாற்றால்
    அரனையே ஏத்துமின்கள் அயல் நெறிப் புகுதல் வேண்டாம்
    அரனுக்கு அடிமையாகி அரிக்கும் ஆட் செய்வாருண்டோ
    ஒருவனே தெய்வம் என்பர் உறுதியின் வழிபட்டோரே.
  9. சிவனையே தெய்வமென்று சிந்தையில் சிந்தை செய்மின்
    அவனலால் தெய்வமில்லை அவனுக்கே அடிமைசெய்மின்
    தவமிலா மனிதரெல்லாம் அவனடி சாரமாட்டார்
    புவன வாதனை கடத்திப் பொன்னடிக் கமலம் ஈவான்.
  10. நூலிடைக் கருத்தை விட்டு நுண்ணிய ஞானமின்றி
    மாலுறு சமய வாத வசனத்தை வசனியாதே
    சீல ஆசிரியன் சொன்ன செந்நெறி சித்தம் வைத்திட்டு
    ஆலமார் கண்டத்தானை அகமுகமாக நோக்கே!
  11. நாரணன் முதலோரெல்லாம் நாள்தோறும் அடிமை செய்ய
    வாரிணர் முடித்த வேணி அண்ணலுக்கு ஆட்செய்யாதே
    காரணம் இன்றி ஓடும் கடிகுரல் ஞமலி போலப்
    பாரிடை உழன்று அலுத்தேன் பாவியேன் பாவியேனே!
  12. பண்டைய வினைவாய்ப்பட்டுப் பத்தியும் பரிவுமின்றி
    வண்டறை கொன்றையானை மனத்திடை இருத்தமாட்டீர்
    அண்டரும் முனிவர் தாமும் அரகர எனும் சத்தத்தைக்
    கண்டு கொண்டிருப்பீரல்லீர் என் செய்வீர் காலனுக்கே!
  13. மனம் அவன்பாலில் செல்ல வாக்கு அவன்நாமம் சொல்லப்
    பனிதரக் கண்ணிரண்டும் பத்தியாய்ப் பராபரன்பால்
    அனுசரிப்பு ஒன்றும் இல்லேன் அடியர்பால் விருப்பும் இல்லேன்
    கனியிலா மரத்தை ஒத்தேன் கறைவளர் கண்டனுக்கே.
  14. ஐயமும் இட்டேனில்லை அடியர்க்கு ஒன்று ஈந்தேனில்லை
    துய்ய மெய்ஞ்ஞான நூலின் சொற் பொருள் அறிந்தேனில்லை
    மையணி கண்டத்தானை மலர்கொடு பணிந்தேனில்லை
    வையகத்து உவர் நீரொத்தேன் என்செய்கேன் மதிவல்லீரே!
  15. சாவதும் பிறப்புமில்லாச் சங்கரர்க்கு அடிமை செய்வான்
    தேவரும் முனிவர்தாமும் தீயிடை நிற்பரென்றால்
    பாவியேன் அடிகளுக்குப் பணிவிடை பலவியற்றேன்
    காவியம் தடங்கண் மாதர் கலவியில் அழுந்தினேனே!
  16. நீரிலாக்குளமும் ஞான நிலையிலா நெஞ்சும் நீண்ட
    தேரிலா ஊரும் பன்னூல் தெரிந்தவர் இல்லா நாடும்
    ஏரிலாச் சீரும் போல ஈசனுக்கு அடிமை யென்னும்
    பேரிலா ஆக்கை பெற்றேன் பேதையேன் பேதையேனே!
  17. ஞானத்தால் ஞானியல்லேன் நன்மையால் குடும்பியல்லேன்
    மோனத்தால் துறவியல்லேன் மூடத்தான் மூடனல்லேன் 
    வானத்தார் வணங்கும் தூய வயப்புலி வனத்துளார்க்குத் 
    தானற்ற அடிமை செய்யேன் சழக்குடைச் சழக்கனேனே! 
  18. எல்லையில் காலமெல்லாம் ஏழையார் வலையுட்பட்டுக்
    கல்வியுங் கருத்தும் இன்றிக் கலக்க நான் அலக்கணுற்றேன்
    அல்லும் நண்பகலும் உன்றன் அடியின் கீழ் இருத்தல் வேண்டும்
    செல்வமும் சிறப்பும் வேண்டேன் திருப்புலிவனத்துளானே!
  19. ஐவகைப் பொறிகளாலும் அறுவகைக் குற்றத்தாலும்
    மை திகழ் கண்டா நின்னை மறந்துழல் மனிதனானேன்
    உய்வகை வேறு காணேன் உயிர்க்குயிராகி நின்ற
    தெய்வமே! அஞ்சல் என்னாய், திருப்புலிவனத்துளானே!
  20. ஆமை போல் ஐந்தொடுக்கி அறிவினுள் அறிவாய் நின்ற
    ஓ மொழிப் பொருளை நாடி ஒன்றுபட்டிருக்கும் வண்ணம்
    காமனைக் காய்ந்த கண்ணால் கடையரில் கயவனேற்குச்
    சேம நல்லறிவு காட்டாய் திருப்புலிவனத்துளானே!
  21. சத்த சத்தென்ன வேதம் சாற்றிய வண்ணம் நின்னைச்
    சத்தெனக் கொண்டு இவ்வாக்கை அசத்தெனத் தள்ளகில்லேன்
    சத்தொடு கூடிப்பின்னும் அசத்தையும் தாவித்தாவிச்
    சத்தனே சதசத்தானேன் என்செய்கேன் சமலனேனே!
  22. பற்றறத் துறந்த ஞானப் பட்டினத்தடிகள் போலப்
    பற்றறத் துறந்தேனில்லை பராபர நிலையைக் கண்டாங்கு
    அற்ற சீவாக்கர் அல்லேன் அன்பில் கண்ணப்பன் அல்லேன்
    குற்றம் செய் மூர்க்கன் அல்லேன் பத்தியில் கோழையேனே !
  23. கல்லெறி சாக்கியர்க்கும் கடைக் கணித்து அருளால் ஆண்டாய்
    வில்லடி பட்டும் அன்று விசயனைக் காத்து ஆட்கொண்டாய்
    புல்லிய சிறிய வாணன் புறக்கடை காத்தா யானால்
    அல்லமர் கண்ட நீ மெய் அன்பனுக்கு எளியனாமே!

41 அறிவிக்கக் குரவரில்லை அன்னையும் பிதாவும் இல்லை
அறிவிக்க அயல் ஒன்றில்லை அம்பலத்தாடி என்றும்
அறிவிக்கும் அப்பனே என்று அயன் அரி முனிவரெல்லாம்
செறிவுடை அடிமை செய்வார் திருப்புலிவனத்துளானே!

  1. பண்டொரு காலந்தன்னில் பதஞ்சலிக்கு அருளிச்செய்தான்
    அண்டர் கோன் வழிபட்டு ஏத்த அனுக்கிரகங்கள் செய்தான்
    முண்டகன் திருமால் போற்ற முத்தி மோட்சம் கொடுத்தான்
    திண்திறல் புலி பூசித்த திருப்புலிவனத்துளானே!
  2. ஆவிற்கும் புலிக்கும் முன்னம் அனுக்கிரகங்கள் செய்தான்
    நாவிக்கும் வலியனுக்கும் நாரைக்கும் அருளிச்செய்தான்
    மூவர்க்கும் முனிவர்கட்கும் முதுக்குறை அறிஞருக்கும்
    தேவர்க்கும் முத்தி தந்தான் திருப்புலிவனத்துளானே!
  3. பரை வடிவு ஈசற்கானபடியினால் பன்றிக்கு அன்று
    அருண் முலை கொடுத்தான் பின்னும் ஆனைக்காய் அரியைவிட்டான்
    குரு வடிவாகிக் கல்லால் குறுகினான் ஆதலாலே
    தெரியருண் மூர்த்தி போலுந் திருப்புலிவனத்துளானே!
  4. அரக்கனை மிதித்ததாலும் அரிவெட்கிப் போனத்தாலும்
    உருக்கனலாகி அண்டம் யாவையும் ஒடுக்கலாலும்
    சுருக்கமில் புவியைத் தாங்கித் தூலமாய் இருத்தலாலும்
    செருக்கள ஆற்றலுள்ளான் திருப்புலிவனத்துளானே!
  5. இன்பத்துள் இன்பமாய நின்னடி எய்தும் வண்ணம்
    துன்பத்துள் துன்பம் நீங்கித் துறவிகள் தூங்கி நிற்பார்
    பொன்பது மத்தோன் மாயன் புண்ணியத் தவங்கள் நோற்பார்
    செம்பதுமத் தாள் காட்டாய் திருப்புலிவனத்துளானே!
  6. அறிவுருவாய என்னை ஆணவம் அனாதி கூடிப்
    பிறிவறியாத நின்னைப் பிரித்துத் தான் முழுதுமாகி
    நெறியினை மறைத்துப் பொல்லா நீசருக்கு அடிமையாக்கிச்
    செறி இருள் நின்றதென்னே திருப்புலிவனத்துளானே!
  7. உடம்பினைச் சிவமே என்பர் உடம்பிற்கு மூலம் ஓரார்
    கடம்படு பிராணன்தானே கத்தனென்று உரைப்பர் அஞ்சு
    மடம் பெறும் இந்திரியத்தை மதியென்பர் இவைக்கு மூலம்
    திடம்படு நின்னைக் காணார் திருப்புலிவனத்துளானே!
  8. அனுபவத் தறிதலன்றி அளவையால் அறியக் கூடாச்
    சனகனைச் சாக்கி சொன்னால் சருவரும் ஒப்புக்கொள்வர்
    மனம் ஒரு பாலே விட்டு மலரடி நோக்கும் வஞ்சர்
    தினம் மலரிடினும் வேண்டாத் திருப்புலிவனத்துளானே!
  9. சிவத்தினுக்கு இரண்டு சத்தி திமிரத்துக்கு அனந்த சத்தி
    சிவத்தினுக்கு உயர்ந்ததென்பர் தெளிவிலா மாந்தரெல்லாம்
    சிவத்தினை மறையாதென்னை மறைத்தலால் திமிரபாசம்
    சிவத்தினுக்கு உயர்ந்ததாமோ திருப்புலிவனத்துளானே!
  10. திரை நுரை குமிழி எல்லாம் திரை கடல் தோன்றுமாபோல்
    உரை உயிர் மாயை ஆக்கை உனதிடை உதிக்கக் கண்டேன்
    பரை திரை உருவமாகிப் பசுதொறுங் குடியிருந்த
    திருமறு மார்பன் போற்றும் திருப்புலிவனத்துளானே!
  11. தேக மாது உமை தன் கூறு சீவனின் கூறதானால்
    ஆகமாய்ப் பிறந்து இறப்பது ஆரெனல் அறையல் வேண்டும்
    வாகன இடப ஊர்தி மனமென அறிந்து கொண்டேன்
    தேக ஆலயத்தை நீங்காத் திருப்புலிவனத்துளானே!
  12. அனாதியின் மலம் வந்தென்னை அடுத்தது அதற்குமுன்னே
    மனாதிகளிலாத வாறு மலடி பால் மைந்தன் போலத்
    தனாதி நின் சத்தியாலே தனுகரணங்கள் வந்து
    பினாதி நிற் பெற்றுப் பின்னைப் பிரிந்ததும் பேசல் வேண்டும்
    செனாதிபன் வழிபட்டு ஏத்தும் திருப்புலிவனத்துளானே!
            (இஃது ஐ அடிச் செய்யுள்)
  13. கடலிலே கலந்த ஆறு கதியிடைப் பின் வந்தாலும்
    கடலினுட் தன்மை குன்றாக் கதையென நினைக்கண்டோரும்
    உடலிடை இருந்தும் உண்டும் உறங்கியும் உலாவி நின்றுந்
    திடனுடை ஞானியன்றோ திருப்புலிவனத்துளானே!
  14. ஒன்று இரண்டல்ல என்று ஆங்கு ஒன்றினை ஒன்றால் பற்றி
    நன்று தீதென்னா நிற்கும் ஞானிகள் உள்ளக் கோயில்
    என்று(ம்) நிற்கு இனிய தென்றோ விடைவிடாதிருந்த தெம்மான்
    சென்றடையாத செல்வத் திருப்புலிவனத்துளானே!
  15. பாசத்தார் பாசத்தோடும் பதிந்திடப் பசுவார் நின்பால்
    காசற்ற விழியார் போலக் கலந்தபின் பிரிவதில்லை
    ஆசற்ற நீயும் நானும் அன்னியம் இன்மையாலே
    தேசத்தார் பரவலான திருப்புலிவனத்துளானே!
  16. கீட்பட்டுக் கீடநல்ல கேழ் கிளர் குளவியாலே
    ஆட்பட அது தானான அதிசயம் போலும் அம்ம!
    நாட்படப் பிரிந்த நாயேன் நாத நிற்கு ஆட்செய்தத்தால்
    சேட் படச் சிவமதானேன் திருப்புலிவனத்துளானே!
  17. வடிவிலா வடிவின் நின்று மனமிலாத் தொழில் குயிற்றி
    அடி முடியில்லா ஞான ஆரமுதுண்டு நிற்போர்
    படு குழியனைய பெண்டிர் பாழ் நரி அனைய மைந்தர்
    செடியுடை ஆக்கை வேண்டார் திருப்புலிவனத்துளானே!
  18. நகாரத்தின் மயலை ஞான வாளினால் நறுக்கிப் பின்னர்
    மகாரத்தின் மறைப்பை நாமே மணியெனும் மதியால் வாட்டி
    வகாரத்தின் வழியே சென்று மால் அயன் அறியாது ஏங்கும்
    சிகாரத்தைக் கண்டேன் நின்னால் திருப்புலிவனத்துளானே!
  19. நோயிலா ஆக்கை பெற்று நுண்ணறிவு உடையராகித்
    தாயினும் இனிய நின்னைச் சமாதியிற் காணமாட்டார்;
    மாயையால் வகுக்கப்பட்ட வடிவிடை நின்னைக் காணச்
    சேயராய் அரற்றுகின்றார் திருப்புலிவனத்துளானே!
  20. தனுவொடு கலவாராயின் சார்தரா வினை இரண்டும்
    தனுவொடு கலத்தலாலே சார்தரும் வினை இரண்டும்
    மனம் மொழி காயம் மூன்றும் மவுன முத்திரையின் நிற்பச்
    சின மயல் அகன்றோர் போற்றும் திருப்புலிவனத்துளானே!
  21. குறி அறிவாகும் கோயில் குறிப்பரும் ஆவியாகும்
    அறிவு சங்கமமே எல்லாம் அறிவு எனக் கண்டுகொண்டேன்
    அறியென உடலும் கண்ணும் சமாதியில் இருக்கும் காலைச்
    செறி பவம் இனியேற் குண்டோ திருப்புலிவனத்துளானே!
  22. சைவ சித்தாந்தம் எல்லாம் தான் அவனாகி நிற்றல்
    மையறு வேதம் சித்தம் மற்றது நானே யென்னல்
    உய் வகைக்கு இரண்டும் ஒன்றென்று ஓதி என்னுயிர்க்கு இலாபம்
    செய்த நற்குரவன் நீயே திருப்புலிவனத்துளானே!
  23. கண்ணினால் காணாக்காட்சி காதினாற் கேளாக் கேள்வி
    எண்ணினால் எண்ணா எண்ணம் எழுத்தினால் எழுதாக் கல்வி
    மண்ணை பாலகன் உன் மத்தன் மதியொத்த ஞானம் எல்லாம்
    திண்ணமாய்க் காட்டும் இந்தச் செவிக்கினி யமிர்தமன்றே!
  24. எங்கணும் இருக்கையாலும் இருவினை அறுத்தலாலும்
    செங்கதிர் மதிய மீனம் தேய்ந்திட நிற்கையாலும்
    சங்கை ஒன்றின்றி எல்லாம் தானறிந்திடுதலாலும்
    செங்கண் மாற்கு அதிகம் நீயே திருப்புலிவனத்துளானே!
  25. அறிவு அறியாமை தன்னை அன்று நான் அறியேன் இன்றும்
    குறியுறக் காணேன் நின்ற ன்கூத்தாட்டல் இருந்த தென்னே
    மறி மழுக் கரத்தாய்! உன்றன் மலரடிக் காண நோக்கிச்
    செறி பல முனிவர் போற்றும் திருப்புலிவனத்துளானே!

        முற்றும் .
    திருச்சிற்றம்பலம் .