திருப்புகழ் பாடல் 12 – Thiruppugazh Song 12 – Kathadarungayal

திருப்புகழ் பாடல் 12 – திருப்பரங்குன்றம்

தானன தந்தன தந்தனந் தந்தன
தானன தந்தன தந்தனந் தந்தன
தானன தந்தன தந்தனந் தந்தன …… தனதான

காதட ருங்கயல் கொண்டிசைந் தைம்பொறி
வாளிம யங்கம னம்பயந் தந்திருள்
கால்தர விந்துவி சும்பிலங் கும்பொழு …… தொருகோடி

காய்கதி ரென்றொளிர் செஞ்சிலம் புங்கணை
யாழியு டன்கட கந்துலங் கும்படி
காமனெ டுஞ்சிலை கொண்டடர்ந் தும்பொரு …… மயலாலே

வாதுபு ரிந்தவர் செங்கைதந் திங்கித
மாகந டந்தவர் பின்திரிந் துந்தன
மார்பில ழுந்தஅ ணைந்திடுந் துன்பம …… துழலாதே

வாசமி குந்தக டம்பமென் கிண்கிணி
மாலைக ரங்கொளும் அன்பர்வந் தன்பொடு
வாழநி தம்புனை யும்பதந் தந்துன …… தருள்தாராய்

போதிலு றைந்தருள் கின்றவன் செஞ்சிர
மீதுத டிந்துவி லங்கிடும் புங்கவ
போதவ ளஞ்சிவ சங்கரன் கொண்டிட …… மொழிவோனே

பூகமு டன்திகழ் சங்கினங் கொண்டகி
஡ணவம டந்தைபு ரந்தரன் தந்தருள்
பூவைக ருங்குற மின்கலந் தங்குப …… னிருதோளா

தீதக மொன்றினர் வஞ்சகந் துஞ்சியி
டாதவர் சங்கரர் தந்ததென் பும்பல
சேர்நிரு தன்குலம் அஞ்சமுன் சென்றடு …… திறலோனே

சீதள முந்தும ணந்தயங் கும்பொழில்
சூழ்தர விஞ்சைகள் வந்திறைஞ் சும்பதி
தேவர்ப ணிந்தெழு தென்பரங் குன்றுறை …… பெருமாளே.