திருப்புகழ் பாடல் 7 – திருப்பரங்குன்றம்
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன …… தனதான
அருக்கு மங்கையர் மலரடி வருடியெ
கருத்த றிந்துபின் அரைதனில் உடைதனை
அவிழ்த்தும் அங்குள அரசிலை தடவியும் …… இருதோளுற்
றணைத்தும் அங்கையின் அடிதொறும் நகமெழ
உதட்டை மென்றுபல் இடுகுறி களுமிட
அடிக்க ளந்தனில் மயில்குயில் புறவென …… மிகவாய்விட்
டுருக்கும் அங்கியின் மெழுகென உருகிய
சிரத்தை மிஞ்சிடும் அநுபவம் உறுபலம்
உறக்கை யின்கனி நிகரென இலகிய …… முலைமேல்வீழ்ந்
துருக்க லங்கிமெய் உருகிட அமுதுகு
பெருத்த உந்தியின் முழுகிமெ யுணர்வற
உழைத்தி டுங்கன கலவியை மகிழ்வது …… தவிர்வேனோ
இருக்கு மந்திரம் எழுவகை முநிபெற
உரைத்த சம்ப்ரம சரவண பவகுக
இதத்த இங்கிதம் இலகிய அறுமுக …… எழில்வேளென்
றிலக்க ணங்களும் இயலிசை களுமிக
விரிக்கும் அம்பல மதுரித கவிதனை
இயற்று செந்தமிழ் விதமொடு புயமிசை …… புனைவோனே
செருக்கும் அம்பல மிசைதனில் அசைவுற
நடித்த சங்கரர் வழிவழி அடியவர்
திருக்கு ருந்தடி அருள்பெற அருளிய …… குருநாதர்
திருக்கு ழந்தையு மெனஅவர் வழிபடு
குருக்க ளின்திற மெனவரு பெரியவ
திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண …… பெருமாளே.