திருப்புகழ் பாடல் 153 – பழநி
தான தனதனன தான தனதனன
தான தனதனன தான தனதனன
தான தனதனன தான தனதனன …… தனதான
கோல மதிவதனம் வேர்வு தரஅளக
பாரம் நெகிழவிழி வேல்கள் சுழலநுவல்
கோவை யிதழ்வெளிற வாய்மை பதறியிள …… முகையான
கோக னகவுபய மேரு முலையசைய
நூலி னிடைதுவள வீறு பறவைவகை
கூற யினியகள மோல மிடவளைகள் …… கரமீதே
காலி னணிகனக நூபு ரமுமொலிக
ளோல மிடஅதிக போக மதுமருவு
காலை வெகுசரச லீலை யளவுசெயு …… மடமானார்
காதல் புரியுமநு போக நதியினிடை
வீழு கினுமடிமை மோச மறவுனது
காமர் கழலிணைக ளான தொருசிறிது …… மறவேனே
ஞால முழுதுமம ரோர்கள் புரியுமிக
லாக வருமவுணர் சேர வுததியிடை
நாச முறஅமர்செய் வீர தரகுமர …… முருகோனே
நாடி யொருகுறமின் மேவு தினைசெய்புன
மீதி லியலகல்கல் நீழ லிடைநிலவி
நாணம் வரவிரக மோது மொருசதுர …… புரிவேலா
மேலை யமரர்தொழு மானை முகரரனை
யோடி வலம்வருமுன் மோது திரைமகர
வேலை யுலகைவல மாக வருதுரக …… மயில்வீரா
வீறு கலிசைவரு சேவ கனதிதய
மேவு முதல்வவயல் வாவி புடைமருவு
வீரை வருபழநி ஞான மலையில்வளர் …… பெருமாளே.