திருப்புகழ் பாடல் 160 – பழநி
ராகம் – நாட்டகுறிஞ்சி; தாளம் – சதுஸ்ர த்ருவம்
( எடுப்பு /4/4/40 ), கண்டநடை (35)
தனதனன தானந்த தத்ததன தானதன
தனதனன தானந்த தத்ததன தானதன
தனதனன தானந்த தத்ததன தானதன …… தனதான
சுருதிமுடி மோனஞ்சொல் சிற்பரம ஞானசிவ
சமயவடி வாய்வந்த அத்துவித மானபர
சுடரொளிய தாய்நின்ற நிட்களசொ ரூபமுத …… லொருவாழ்வே
துரியநிலை யேகண்ட முத்தரித யாகமல
மதனில்விளை யாநின்ற அற்புதசு போதசுக
சுயபடிக மாவின்ப பத்மபத மேஅடைய …… உணராதே
கருவிலுரு வேதங்கு சுக்கிலநி தானவளி
பொருமஅதி லேகொண்ட முக்குணவி பாகநிலை
கருதவரி யாவஞ்ச கக்கபட மூடியுடல் …… வினைதானே
கலகமிட வேபொங்கு குப்பைமல வாழ்வுநிஜ
மெனவுழலு மாயஞ்செ னித்தகுகை யேஉறுதி
கருதசுழ மாமிந்த மட்டைதனை யாளஉன …… தருள்தாராய்
ஒருநியம மேவிண்ட சட்சமய வேதஅடி
முடிநடுவு மாயண்ட முட்டைவெளி யாகியுயி
ருடலுணர்வ தாயெங்கு முற்பனம தாகஅம …… ருளவோனே
உததரிச மாமின்ப புத்தமிர்த போகசுக
முதவுமம லாநந்த சத்திகர மேவுணர
வுருபிரண வாமந்த்ர கர்த்தவிய மாகவரு …… குருநாதா
பருதிகதி ரேகொஞ்சு நற்சரண நூபுரம
தசையநிறை பேரண்ட மொக்கநட மாடுகன
பதகெருவி தாதுங்க வெற்றிமயி லேறுமொரு …… திறலோனே
பணியுமடி யார்சிந்தை மெய்ப்பொருள தாகநவில்
சரவணப வாவொன்று வற்கரமு மாகிவளர்
பழநிமலை மேனின்ற சுப்ரமணி யாவமரர் …… பெருமாளே.