2017 சனிப்பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்? 80/100
When is Sani Peyarchi in 2017?
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் – அனைத்து ராசிகளுக்கும்
நடுநிலைமை தவறாத துலாம் ராசிக்காரர்களே..
கடந்த ஏழரை ஆண்டுகளாக உங்களைப் பாடாய்ப்படுத்திய சனி பகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை தைரிய ஸ்தானம் என்னும் 3-ம் இடத்தில் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். இனி, நீங்கள் தொட்டது துலங்கும். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவீர்கள். முதல் முயற்சியிலேயே வெற்றி பெறுவீர்கள்.
இழந்த செல்வம், செல்வாக்கு அனைத்தும் திரும்பப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். சிலருக்கு சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டாகும். வழக்குகளில் வெற்றி உண்டாகும். கடன்களைப் பற்றிய கவலை நீங்கும். சுபநிகழ்ச்சிகளில் உங்களுக்கு முதல் மரியாதை கிடைக்கும். மற்றவர்கள் வியக்கும் வண்ணம் சாதனை புரிவீர்கள். வி.ஐ.பி.களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் உண்டாகும்.
சனிபகவானின் பார்வைப் பலன்கள்
சனிபகவான் உங்களின் ஐந்தாம் வீட்டைப் பார்ப்பதால் பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். பிள்ளைகளுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். சில சமயங்களில் பிள்ளைகள் பிடிவாதமாக நடந்துக் கொள்வார்கள். சனிபகவான் உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்பதால், சமூகத்தில் அந்தஸ்து உயரும். தந்தையாருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து செல்லும். சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும்.
சனிபகவான் உங்களின் 12-ம் வீட்டைப் பார்ப்பதால் ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் போகும். மகான்கள், சித்தர்களின் தொடர்பு கிடைக்கும்.
வியாபாரிகளே! கடையை நவீனப்படுத்துவீர்கள். பொறுப்பில்லாத வேலையாள்களை மாற்றுவீர்கள். விளம்பர யுக்திகளைக் கையாண்டு, தேங்கிக் கிடக்கும் சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். திடீர் லாபம் அதிகரிக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத் தாகும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். சினிமா, பதிப்புத்துறை, ஹோட்டல், கிரானைட், டைல்ஸ், மர வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். பங்குதாரர்களிடம் வளைந்துகொடுத்துச் செல்வது நல்லது.
உத்தியோகஸ்தர்களே! பிரச்னை தந்த மேலதிகாரி மாற்றப்படுவார். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். சம்பள பாக்கியும் கைக்கு வரும். சிலருக்கு புது வேலை அமையும். வழக்குகள் சாதகமாகும். எதிர்ப்புகள் நீங்கும்.
மாணவ – மாணவிகளே! தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவீர்கள். கலை, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். சோம்பல், விரக்தி நீங்கும். கலைத்துறையினர்களே! கிசுகிசுத் தொந்தரவு கள், வதந்திகள் நீங்கும். உங்களின் படைப்புகளுக்கு அரசாங்க விருது கிடைக்கும். மறைந்து கிடந்த உங்கள் திறமைகள் வெளிப்படும்.
மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, கடைக்கோடி மனிதரான உங்களைக் கோபுரத்துக்கு உயர்த்து வதாகவும் பிரபலங்களுக்கான அந்தஸ்தைப் பெற்றுத் தருவதா கவும் அமையும்.
சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:
19.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், இழுபறி வேலைகள் உடனே முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். போட்டியில் வெற்றி பெறுவீர்கள். பழைய நண்பர்களைச் சந்திப்பீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். செலவுகள் அதிகரிக்கும். யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
உங்களின் ராசிநாதனாகிய சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 வரை, 27.9.19 முதல் 24.2.20 வரை, 17.7.20 முதல் 20.11.20 வரை சனி செல்வதால், எதிலும் வெற்றி, எதிர்பாராத பணவரவு உண்டு. ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்தில் முதலீடு செய்வீர்கள். மகளுக்கு திருமணம் கூடி வரும். விலகியிருந்த மூத்த சகோதரர்கள் விரும்பி வந்து பேசுவார்கள்.
25.2.20 முதல் 16.7.20 வரை மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனிபகவான் சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால் யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். அரசாங்க விவகாரங்களில் எச்சரிக்கையாக இருக்கவும்.
சனிபகவானின் வக்கிர சஞ்சாரம்:
29.4.18 முதல் 11.9.18 வரை மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமா வதால் பூமி சேர்க்கையுண்டாகும். மனைவிக்கு வேலை கிடைக்கும். சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 வரை; 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கரிப்பதால், வீண் விமர்சனங்களைத் தவிர்க்கவும். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால், நல்லது நடக்கும்.
பரிகாரம்:
பெரம்பலூர் மாவட்டம், வெங்கனூர் எனும் ஊரில் அருளும் ஸ்ரீவிருத்தாம்பிகை உடனுறை ஸ்ரீவிருத்தகிரீஸ்வரரை, பிரதோஷ நாளில் சென்று வணங்கி வாருங்கள்; தொட்டதெல்லாம் துலங்கும்.